புதன், 3 டிசம்பர், 2014

விந்தை மிகு அன்பிற்கே வரைவிலக்கணம் ஆனாய் நீ ....!


எந்தையே எம்முயிரே;
எங்கு நீ சென்றாயோ?
சிந்தை நாம் கவல்கின்றோம் 
சோர்வுற்று வாழ்கின்றோம் 
உந்தன் பிரி வாலின்று 
உரு துணை இழந்து நாம் 
வேந்தளவில் புழுவாக 
வேதனையால் துடிக்கின்றோம் 

மந்த மாருத மாய் நீயே 
மகிழ்வித்தாய் எங்களையே 
சந்தனத் தோப் பாக 
செழிப்புரயெம் வாழ்க்கையும் 
பந்த பாசம் பாசறையில் 
பயில் வித்தாய் எங்களை நீ 
விந்தை மிகு அன்பிற்கே 
வரை விலக்கணம் ஆனாய் நீ....!

சாய்ந்தமரு தெம்பதியில் 
சகலருமே எப்பொழுதும் 
தூய்மையுறும் உன்னன்பைத் 
துளியேனும் தயக்கமின்றி 
நேயமுடன் மதித்துனது 
நேர்மை நல் லாற்றலோடு 
வாய்மையரும் பண்புகளை 
வாழ்த்தி நிதம் மகிழ்ந்தனரே....!

மருத்துவத்தால் பல்லாயிரம் 
மக்களது நோய் தீர்த்த 
அருந்தந்தையே உம் பிரிவால் 
ஆராகுமெம் வேதனைக்கு 
அருமருந்து இனி நாங்கள் 
ஆரிடம் தான் பெற்றிடலாம் 
கருனையிறை அருளொன்றே 
கை கொடுக்கும்; ஆறுகிறோம் 

சன் மார்க்க நெறி பேணி 
சாந்தமுடன் நீ வாழ்ந்தாய் 
உன் சேவை மனப் பான்மை 
உள்ளொன்று புறமொன்று 
முன்னொன்று பின்னொன்று 
மிழற்றுகிற பழக்க மின்றி 
நன்னெறிகள் பேணி நிதம் 
நலம் பெறவே வாழ்ந்தாய் நீ 

சேர்பகையே வந்தாலும் 
சத்தியத்தில் தவறாது 
நேர்மையே நல் கிடவே 
நடத்திடுவாய் என்றென்றும் 
ஒர்மையிறை எண்ணமே 
உன் துணையாம் என்றே நீ 
கூறிய அறி வுரைகளின்னும் 
காதுகளில் ஒலிக்கிறதே....!

அரும் சுவர்க்கத் தலைவாசல்,
அதை விடவும் அருந் தந்தை 
பெருந் தகுதி உயர்வாமே 
பெருமானார் பொன் மொழியை 
கருத்தில் நாம் ஆழமாய்க் 
கொண்டழகாய் உன் பெயரைத் 
துருப்பிடிக்கா தென்றுமே 
தூய்மையுறக் காத்திடுவோம்....!

கலைமகளாய் நானென்றும் 
கவின் இஸ்லாம் வழியினிலே 
கலை இலக்கியப் பணிகளையே 
கட்டுப்பாடு ஒழுக்கமுடன் 
நிலையாகத் தொடர்ந் தாற்ற 
நெஞ்சுறுதி தந்த நீயே 
நிலை கலங்க எமை விட்டே 
நீத் தாயே இவ்வுலகை....!

என்னெழுது  கோலுனது 
ஆத்மாவின் சாந்திக்காய் 
கண்ணீரை மை யாக்கிக் 
கரை புரளும் பாசத்தை 
பொன்னரிய எழுத்தாக்கிப் 
பிரார்த்தனை மாலையாய் 
இன்றிங்கே தொடுகிறதே 
இறையருள் கவே ஆமீன்.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக