நடந்ததை நினைத்து வருந்தாமல் - இனி
நடப்பதில் கவனம் செலுத்தி விடு
உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் - நல்ல
உயரிய பாத்திரம் படைப்பது மேல்
இடரினைக் கண்டு அஞ்சாது - அதை
இதய பலத்துடன் எதிர் கொள்ளு
இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் - தினம்
கடமையைச் செய்து உயர்வடைவாய்.....!
போன "பொழுதுகள்" - திரும்பாது என்றும்
பொய்களும் நிலைத்து வாழாது
மானங்காத்து வாழ்பவரை - இங்கு
மன்பதை என்றும் மறக்காது
தேனாய் வாழ்வை அமைப்பதற்கு - நிதம்
திடமே வேண்டும் நெஞ்சத்தில்
வானும் மண்ணும் நம் சொந்தம் - என்று
வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்.....!
சாதிபேதம் தொலைத்தே தான் - நல்ல
சமத்துவம் வளர்த்தல் பணியாகும்
நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும்
நெஞ்சில் அன்பு தனை வளர்த்து
மேதினிதன்னில் ஒற்றுமையாய் - நல்ல
மிடுக்கை வாழ்வது வாழ்வாகும்
சாதனை வேண்டும் வாழ்க்கையிலே - வரும்
சந்ததி வாழ்த்த வாழ்த்திடனும்.....!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக