எழிலுறு உலக மாதா
இதமாய் இளைஞர் சக்தி
தொழிலெனும் கருவி கொண்டு
துரத்துதல் ஆகும் பொல்லா
இழிவிருள் வறுமை தன்னை
இரவியை மிளிரும் தூய
இளைஞரே ஓன்று கூடி
இன்பமாய் உழைக்க வாரீர்.....!
பள்ளியில் படித்தோம் மேன்மை
பட்டங்கள் பலவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி பூண்டு
குவலயம் தன்னை மீட்க
தெள்ளிய உணர்வினோடு
திறம்பட உழைத்து மண்ணை
வெள்ளிடை மலையாய் என்றும்
விளங்கிட வைக்க வாரீர்.....!
காடுகள் மாய்த்து நல்ல
கழனிகள் உண்டு பண்ணி
மேடுகள் வளம் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே கண்டு பாடி
கூடியே மகிழ்ந்து வாழ
கூவியே உழைக்க வாரீர்.....!
ஏர் பிடித்தொழுவோம் நல்ல
எந்திரம் துணையாய்க் கொள்வோம்
போர்வைகள் தம்மை நீக்கி
புதுமைகள் உழைப்பில் செய்வோம்
கார் மழை தன்னை தேக்கி
காசினிக் குத்தவும் வண்ணம்
சீர்மையை பயிர்க்குப் பாய்ச்சி
செகமது செழிக்கச் செய்வோம் ....!
தேயிலை இறப்பர் தெங்கு
சிறந்திடும் வயலின் நெல்லு
ஆயநற் கனிகள் நூறும்
அறு சுவைக் குதவும் யாவும்
நேயமாய் வளர்ப்பதாலே
நிலத்திடை வளங்கள் கூடும்
சாய்ந்திடும் கதிர் வளர்த்தால்
தலையை நாம் நிமிர்த்தலாமே.....!
இளைஞர் கை இணைந்தா லிங்கு
எந்கிலை அபிவிருத்து.....?
வளைக்கரம் வாளை ஏந்தி
வயற் கதிர் அறுக்கும் போதும்
களை தனைப் பிடுங்கி வீசிக்
காரிய மாற்றும் போது
சளைத்துப் போம் வறுமைக் கோடு
காணுமே வளத்தை நாடு......!
உயர்வுக்கு இளைஞர் சக்தி
ஓன்று பட்டிணையு மானால்
நயம் பல வந்து கூடும்
நலிவுகள் மறைந்து ஓடும்
புயங்களை உயர்த்தி யிந்தப்
பூமியை பசுமை யாக்க
செயற் பட எழுவீர் எங்கள்
இளைஞரே நாமே சக்தி.....!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக