கொள்ளை யடித்தன னெந்தன கத்தினைக்
கூடிய மர்ந்தனன் பின்னே - அன்புத்
தொல்லை கொடுத்தனன் தொகை யெனக்குள்ளே
தொடர்ந்து உதித்தனன் கள்வன்
வெள்ளை யுளத்தினில் தாமரை போலவன்
விரிந்து கிடந்தனன் நித்தம்
எல்லையிலாதொரு இன்ப உணர்ச்சியில்
என்னை மயக்கினன் சேடி....!
நந்த வனத்தினி லன்றொரு நாழிகை
நாயகனென் கரம் பற்றி
சிந்தை குளிர்ந்திடச் சேர்த்து அணைத்தின்பச்
சேதிகள் செப்பினன் சேடி
எந்த னெழில் உடல் வந்து தழுவிட
தென்ற லிடத்தினைத் தேடும்
அந்த நற் பொழுதினை யானும் மறந்திடல்
ஆகுவ தெங்ஙனஞ் சேடி....!
ஆண்மைக்கவன் நல் இலக்கணமாகுவான்
ஆமிது மெய்யடி சேடி
வீண் புகழ்ச்சியை வெறுத்து ஒதுக்குவான்
வீரனென் காதலன் சேடி
வான் தரும் மழை போலவன் அன்பு
வரவு நிகழ்ந்திடுஞ் சேடி
மான் விழிக்கவன் மகிழ்வினை யூட்டினன்
மறப்பது எங்ஙனஞ் சேடி....!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக