கூடையிலே கொழுந் தெடுத்தும்
கூழுக்கே அடி பிடிகள்
கோடையிலும் குளிரினிலும்
கூடுதலை எம் நேரம்
வாடி விடும், ஆனாலும்
வயிற்றுக்கு வழியில்லை...!
உழைப்பதற்கு ஊதியத்தை
ஒழுங்கின்றித் தருபவரும்
பிழைப்பிற்கு வழியற்றுப்
பெரும் பாவம் புரிபவரும்
சளைக்காமல் வாழுகின்ற
சந்தோஷ நேர முண்டு....!
நாளை வரும் என்று மனம்
நம்பிக்கை கொண்ட தெலாம்
பாழாகிப் போன தந்தோ
படித்திட்ட மாந்த ரெலாம்
ஏழைகளை எந் நாளும்
எரிச்சலுடன் நோக்குகிறார்.....!
நாட்டிற்கு முது கெலும்பு
நாமென்று வார்த்தைகளால்
பாட்டிசைத்து வாழுகின்ற
பாவிகளே, எங்களது
வீட்டிற்குப் பணம் தேவை
வியர்வைக்குப் பணம் கொடுங்கள்....!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக