புதன், 10 டிசம்பர், 2014

குளிர்ந்த மலைகள் சிவப்பேறும்....!



முத்து,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி...!
கொத்திப் பிளந்தனர் மலையினையே
கூடை சுமந்தனர் முதுகினிலே......!

எறும்பு போலச் சோம்பாது - நிதம்
எந்திரம் போல உழைத்தனாராம்
கரும்பு,கதலி,கனி மரங்கள் - நல்ல
காய்கறி யாவும் விதைத்தனராம்

ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனாராம்
பாணும்,பருப்பும் பசிக்குண்ண    - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனாராம்

கொட்டும் மழையும் குளிரும் பனியும் - நன்கு
கொளுத்தும் கொடிய வெய்யிலினிலும் ;
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா துழைத்தனராம்

ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில்  இறங்கினாராம்
காட்டை அழித்துக் கழனிகளாய் - அவர்
கடிய உழைப்பால் மாற்றினராம்...!

உதிரம் தன்னைத் தேயிலைக்கே -
நல்ல உரமாய் இட்டு வளர்த்தனராம் !
மதுரமான தேனீரும் - அந்த
மாண்பினைக் கூறிச் சிவந்ததுவாம்...!

மாடாய் உழைத்து ஓடாகி - அந்த
மன்னர்க் கெல்லாம் தோய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர் - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்

இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி...!
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர்  வாழ்வை குடித்து வைக்கும்...!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக