முயற்சியே எங்கள் பாதை
மகிழ்ச்சியே தேடும் இல்லம்
உயர்ச்சியே அடையும் ஊராம்
உணர்ச்சியே பயணத் தேராம்
அயர்ச்சியை எதிரிப் படையாய்
அழித்து நல் இன்பம் காண்போம்
வியர்வையை வீர வாளாய்
வீசியே உழைத்து வெல்வோம்....!
கெட்டதாம் முயற்சி காணாக்
கடமையில் தூய்மை சேரின்
திட்டமாம் கொள்கை நன்றாய்
தீட்டிடும் வெற்றி பாரீர்
தொட்டவை பொன்னாய் மாறத்
துணிவு தான் வேண்டும் இங்கே
விட்டது அகலும் வினைகள்
வாழ்வது பூக்கும் சிறந்து......!
அடுப்பெல்லாம் எரிந்து பசியை
அழித்திடும் உறுதி வேண்டும்
துடுப்புகள் இளைஞர் நாமே
திருப்பணி தொடங்கி வாழ்வின்
வடுக்களை களைத்து எங்கும்
வெளிச்சத்தை விதைக்க வேண்டும்
கொடுந்துயர் நீங்கி
யார்க்கும் களிப்புறும் விடியல் வேண்டும்.....!
மழை தரும் மேகம் பார்ப்பீர்
மண்வளச் சிறப்பை பார்ப்பீர்
பிழை தராக் கல்வி நெறிகள்
படிகளாய் உயர்வு காட்டும்
இளைஞரே எழுவீர் எங்கள்
இலட்சிய நோக்கம் உழைப்பு
அழைக்கிறேன் வாரீர் உயர்ந்து
ஆக்குவோம் நிம்மதி வெளிச்சம்.....!
கரையினில் ஆளைத் தொழில்கள்
நிரமோடு கண்டோம், இன்னும்
கரையிலாக் கடலில் புகுந்து
கொள்ளுவோம் செல்வத் தொழில்கள்
விரைவுறச் செய்வோம் அறிவால்
விண்ணிலும் அடைவோம் வெற்றி
நிறையெனத் திரள்வீர் கணமும்
நன்மைகள் படைப்போம் நெஞ்சே.....!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக