புதன், 10 டிசம்பர், 2014

அண்ணலை நினைத்து வாழ்வோம்....!



சிலைகளை வணங்கி மாந்தர் - அன்று 
சீரழிவுற்றார் என்றோ 
மலையொளிர் நிலவாய் எங்கள் - தூய 
மா நபி வந்தார் மண்ணில்.....!

அறிவினை மறந்தே அன்று - பெண்ணை 
அழித்தனர் சிசுவில் கொன்று 
நெறியுயர் தீனைக் கொண்டே - நபி 
நிலத்தினை வளர்த்தார் நன்றே.....!

இஸ்லாம் என்னும் தூய - இறை 
நிதியினை மண்ணுக் கீந்து 
ஜாஹிலியர் செய்தீமை - கொடும் 
அனலினை அணைத்தார் தாமே.....!

தொல்லைகள் கடலின் மேலாய் - இங்கு 
துலங்கியே நின்ற காலை 
எல்லையில்லாத இன்ப - உயர் 
இஸ்லாம் தனை விதித்தார்.....!

மண்ணிலே இஸ்லா மென்னும் - எங்கள் 
மாமறை வளர்த்த செம்மல் 
அண்ணலார் நபியை நாமும் - இங்கு 
அனுதினம் நினைத்து வாழ்வோம்.....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக